அனைத்து அடக்கமுறைகளையும் உடைத்தெறிவோம்---------- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்---------- ஓன்றாய் இன்றும் நாமில்லையேல் விடிவு என்றும் எமக்கில்லை

பிரேரணை குறித்து இலங்கை குற்றச்சாட்டு

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான பிரேரணை, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்குப் பாதகமான நிலைமையை ஏற்படுத்தும். நாடுகளின் இறையாண்மையும், உள்நாட்டு நீதிக்கட்டமைப்பையும் இது பாதிக்கும் என இலங்கை குற்றஞ்சாட்டியுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் சபை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட உள்ள பிரேரணை தொடர்பில், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் உள்ளிட்ட உறுப்பு நாடுகளுக்கு இலங்கையினால் அவசரமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ள விசேட கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு: ஐ.நா மனித உரிமைகள் சபையின் நடவடிக்கைகளைத் திசை திருப்பும் வகையில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் செயற்பட்டு வருகின்றன. மனித உரிமைகள் சபையின் நடவடிக்கைகளை நீதிமன்றமொன்றுக்கு நிகராக மாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இது அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளுக்கு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்காது. அமெரிக்காவின் இந்த முயற்சியானது நாடுகளின் இறையாண்மையும், உள்நாட்டு நீதிக்கட்டமைப்பையும் உதாசீனம் செய்யும் வகையில் அமைந்துள்ளது. இவ்வாறான பிரேரணைமூலம் நாட்டுக்கு நன்மையை விடத் தீமைகளே அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.