சட்டங்களை மீறியோர் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும்-அமெரிக்கா
இலங்கையில் சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமைச் சட்டங்களை மீறும் வகையில் செயற்பட்டவர் எவரானாலும், முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பொறுப்புக்கூற வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. வாசிங்டனில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நூலன்ட் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார். புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை தொடர்பாக வெளியாகியுள்ள காணொளி ஜெனிவாவில் இலங்கைக்கு நெருக்கடியை ஏற்படுத்துமா என்பது குறித்து, அமெரிக்காவின் கருத்து என்ன என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்துள்ள இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நூலன்ட், இந்த காணொளி விடயத்தில் பிரபாகரனின் மகன் தொடர்பாக, எம்மால் தெளிவாக உறுதிப்படுத்த முடியவில்லை. இருந்தாலும், நாம் இலங்கையில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை சட்டமீறல் போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து எழுந்த கரிசனைகளை பலமுறை வெளிப்படுத்தியுள்ளோம். சர்வதேச மனிதாபிமான மற்றும் மனிதஉரிமை சட்ட மீறல்களில் ஈடுபட்டவர் எவராயினும், முழுமையான விசாரணை நடத்தி பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும் என்பதை நாம் ஆதரிக்கிறோம். அதனால் தான் எமது பங்காளர்களுடன் இணைந்து, நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறுதலை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை தாமதித்து வருவது தொடர்பான சர்வதேச சமூகத்தின் கவலையை வெளிப்படுத்தும் வகையிலும், நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறுதலை நோக்கி முக்கியமான அடிகளை எடுத்து வைக்க அழைப்பு விடுத்தும் ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.