அனைத்து அடக்கமுறைகளையும் உடைத்தெறிவோம்---------- தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்---------- ஓன்றாய் இன்றும் நாமில்லையேல் விடிவு என்றும் எமக்கில்லை

இலங்கை விடயம் தொடர்பில் இந்திய பாராளுமன்றில் அமளிதுமளி

இந்திய பாராளுமன்றம் நேற்று கூடியபோது இலங்கை தொடர்பாக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி விளக்கமளிக்க வேண்டுமென்றும், இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து விவாதிக்க வேண்டும் என்றும் நேற்று தி.மு.க., அ.தி.முக, பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கட்சிகளின் எம்.பி.க்கள் கூட்டாக குரல் கொடுத்தனர். அப்போது நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஐ.நா சபையில் பொதுவாக எந்த ஒரு நாட்டுக்கு எதிரான தீர்மானத்தையும் இந்திய அரசு ஆதரிப்பதில்லை. இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்படும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியிருந்தார். இது தொடர்பாக அவருக்கு பதில் அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றி உறுப்பினர்கள் மேலும் வலியுறுத்தினால் இவ்விவகாரம் தொடர்பாக வெளியுறவு அமைச்சர் விளக்கமளிப்பார் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் பிரணாப் முகர்ஜியின் இந்த விளக்கத்தை தமிழக எம்பிக்கள் நிராகரித்து கண்டன முழக்கங்களை எழுப்பியபோது அமளிதுமளி ஏற்பட்டது. இந்நிலையில் சபை அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு இன்று அமர்வுகள் ஆரம்பமாகின. இன்று அறிக்கையொன்றை சமர்ப்பித்து சபையில் உரையாற்றிய இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, இலங்கையின் நடந்ததாக கூறப்படும் யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் செனல் 4 நிறுவனம் ஒளிபரப்பியுள்ள காட்சிகள் குறித்து விசாரிக்கப்பட வேண்டியது அவசியம். அதை இலங்கைதான் செய்தாக வேண்டும். இதை இலங்கை செய்யும் என்று நம்புகிறோம். அத்துடன், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பை அடிப்படையாகக் கொண்டு, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானம் குறித்து இந்தியா முடிவெடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரிப்பதா வேண்டாமா என்பது குறித்து, இந்தியா இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நட்பு இருக்கிறது. அந்த நட்புறவில் விளைவுகளை ஏற்படுத்தாத வகையில் இந்தியா எமது முடிவை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார். அவர் உரையாற்றியதைத் தொடர்ந்து, அறிக்கையின் பிரதிகளை கிழித்தெறிந்த தமிழக எம்.பி.க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.